பேரா மந்திரி பெசார் டத்தோ சரானி முகமட் தலைமையின் கீழ் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத் திறன், மிகச் சிறப்பாக நடைபெற்று வருவது குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.
பேரா மாநில அரசின் விரைவான அங்கீகார செயல்முறை, மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சியை விரைவாகக் கட்டியெழுப்ப உதவியுள்ளது என்றும், முதலீட்டாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது என்றும் அன்வார் புகழாரம் சூட்டினார்.
டிஆர்பி ஹைகோம் குழும நிர்வாக இயக்குநர் டான் ஶ்ரீ சையிட் ஃபைசால் அல்பார் குறிப்பிட்டது போல, எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அங்கீகார செயல்முறையை விரைவுபடுத்துவதில் ஆதரவும் ஒத்துழைப்பும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார் பிரதமர்.
தஞ்சோங் மாலிமில் நேற்று பண்டார் புரோட்டோன் நகரில் புரோட்டான் மின்சார வாகனத் தொழிற்சாலையின் தொடக்க விழாவில் உரையாற்றும் போது டத்தோ ஶ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.
இது, KIGIP எனப்படும் கொரியாவின் ஒருங்கிணைந்த பசுமை தொழில்துறை பூங்காவுக்கான தமது அனுபவத்தை மட்டும் சார்ந்து இருக்கவில்லை. மாறாக, இது பேரா மாநில அரசின் பெருமைப்படத்தக்க அங்கீகார செயல்முறையையும், செயல்திறனையும் உள்ளடக்கியுள்ளது. அதற்காக பேரா அரசுக்கு நன்றி கூறத் தாம் கடமைப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பேரா மந்திரி பெசார் டத்தோ சரானி முகமட், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்துறை அமைச்சர் சாங் லீ காங் மற்றும்n சையிட் ஃபைசால் ஆகியோர் கலந்து கொண்டனர்.








