கோத்தா கினபாலு, நவம்பர்.27-
ஆறாம் படிவ மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மெட்ரிகுலேஷன் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இணையாக ஆறாம் படிவ மாணவர்களின் கல்வித் தகுதியை உயர்த்திட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக ஒரு பரிந்துரையை கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்கிடம் தாம் முன்மொழிந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
முன்பு, ஆறாம் படிவம் என்பது இடைநிலைக்கல்வியின் ஒரு கடைசிப் பகுதியாகக் கருதப்பட்டது. ஆனால், ஆறாம் படிவ மாணவர்களின் கல்வி நிலை, மெட்ரிகுலேஷன் நிலையைப் போல் உயர்த்தப்ப்பட வேண்டும்.
அதே போன்று மெர்ரிகுலேஷன் மாணவர்கள் அனுபவித்து வரும் அனைத்து வசதிகளும் ஆறாம் படிவ மாணவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சரிடம் தாம் முன்மொழிந்துள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








