கோலாலம்பூர், அக்டோபர்.24-
தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகலாம் என்று கூறப்படும் டத்தோ எவோன் பெனடிக்கிடமிருந்து எந்தவொரு ராஜினாமா கடிதத்தையும் அமைச்சரவை இன்னும் பெறவில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எவோன் பெனடிக் கலந்து கொண்டார். ஆனால், பதவி விலகுவது குறித்து எந்தவொரு கடிதத்தையும் வழங்கவில்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இன்று புத்ராஜெயா, பிரசிண்ட் 16 இல் உள்ள AL- Quddus பள்ளிவாசலில் மக்களுடன் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.
சபா மாநிலத்திற்கு கூட்டரசு வருமானத்தில் 40 விழுக்காட்டுப் பங்கை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக வழங்கத் தவறியிருக்கும் கூட்டரசு அரசாங்கத்தின் நடவடிக்கை, சட்டவிரோதமானது என்று அதிரடித் தீர்ப்பை வழங்கியிருக்கும் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து, சட்டத்துறை தலைவர் மேல்முறையீடு செய்வாரேயானால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக எவோன் பெனடிக் அறிவித்து இருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உப்கோ ( UPKO ) கட்சியின் பெனம்பாங் தொகுதி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப கூட்டரசு அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை வகித்து வரும் எவோன் பெனடிக், பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.
சபாவில் வாழும் கடசான், டூசுன், மூருட் போன்ற சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகள் மற்றும் மேம்பாட்டிற்காக தோற்றுவிக்கப்பட்ட உப்கோ கட்சி எடுத்துள்ள முடிவிற்கு ஏற்ப எவோன் பெனடிக் பதவி துறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








