கோலாலம்பூர், செப்டம்பர்.29-
சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் கீழ் தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமானோருக்குச் சமூகவியல் பாதுகாப்பு சலுகை வழங்கப்படுகிறது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
சொக்சோ வரலாற்றில் கடந்த பத்து ஆண்டுகளில் இது 63 விழுக்காடு உயர்வாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயதொழில் புரிகின்றவர்களுக்கான சொக்சோ திட்டத்தின் வாயிலாக பத்து லட்சத்திற்கும் அதிகமானோர், புதிய சந்தாதாரர்களாக அந்த சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் தங்களைப் பிணைத்துக் கொண்டுள்ளனர் என்று அமைச்சர் விளக்கினார்.
சந்தாதாரர்களுக்குச் செலுத்தப்படும் வட்டி விகிதமும் உயர்ந்து இருப்பதாக ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார். கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பாக, 2015 ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 200 ரிங்கிட்டாக இருந்த வட்டி விகிதம் இவ்வாண்டில் 5 ஆயிரத்து 800 ரிங்கிட்டாக உயர்வு கண்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தவிர சொக்சோ சட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம் சந்தாதாரர்களுக்கான அனுகூல விகிதம் மேலும் 20 விழுக்காடு அதிகரித்து இருப்பதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.








