கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-
சபாவில் கனிம வள ஆய்வுக்கான உரிமங்களை வழங்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஏன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்பது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
அந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், வதந்தியை அடிப்படையாகக் கொண்டு பேசப்பட்ட தகவல்களாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கினார்.
சபாவின் 6 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பரவலாகப் பேசப்பட்டு வரும் வேளையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் குற்றஞ்சாட்டியிருப்பது ஏன் என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.
தஞ்சோங் பத்து சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அண்டி முகமட் சுர்யாடி பான்டி மற்றும் சிண்டுமின் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் யுசோஃப் ஜொஸ்ரி யாகோப் ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இதுவரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த லஞ்ச ஊழலில் சபாவைச் சேர்ந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு, வீடியோ வெளியிடப்பட்ட போதிலும் அனைவரையும் குற்றஞ்சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆதாரங்கள் இல்லாமல், வெறும் வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குற்றஞ்சாட்டிவிட முடியாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.








