கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த போது இருதய ரத்தக் குழாயில் 22 செண்டிமீட்டர் நீளமுள்ள நுண்ணிய கம்பி ஒன்று, மருத்துவர்களின் கவனக்குறைவினால் வெளியே எடுக்காமல் இருதயப் பகுதியிலேயே கைவிடப்பட்டு,பெரும் ரண வேதனைக்கு ஆளானதாக கூறப்படும் ஒரு சிறுநீரக நோயாளியான சிவபெருமாள் சுப்பிரமணியம் நேற்று இரவு மரணமுற்றார்.
51 வயதான சிவபெருமாள் சுப்பிரமணியம் மரணமுற்றதை அவரின் குடும்ப வழக்கறிஞர் குணமலர் கோவிந்தராஜு இன்று உறுதிபடுத்தினார். தமது கட்சிக்காரர் சிவபெருமாள் சுப்பிரமணியம் மரணமுற்றது கவலை அளிக்கிறது ஏன்று குணமலர் கோவிந்தராஜு தெரிவித்தார்.
இறப்பதற்கு முன்னதாக சிவபெருமாள், வலி தாங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வந்ததாக தமக்கு தெரிவிக்கப்ப்டடது என்று அவர் குறிப்பிட்டார். சிவபெருமாள் மரணம் தொடர்பில் அவரின் குடும்பத்திற்கு நியாயம் கிடைப்பதற்கு நீதி விசாரணை தேவை என்று சுகாதார அமைச்சை, வழக்கறிஞர் குணமலர் கோவிந்தராஜு கேட்டுக்கொண்டார்.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான சிவபெருமாள், நெஞ்சு வலி காரணமாக கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அம்புலன்ஸ் வண்டியின் மூலம் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வலியினால் துடித்துப் போன சிவபெருமாள் மறுநாள் எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அறுவை சிகிச்சையின் போது அவரின் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த 22 மீட்டர் நீளமுள்ள நுண்ணிய கம்பி, இருதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் சிக்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.
.
இது தொடர்பான காணொளி ஒன்று கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில் இது தொடர்பாக பதில் அளித்த கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் இயக்குநர் டாக்டர் சுல்கர்னாயின் முஹமாட் ரஃபி, விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் நோயாளிகளின் அடிப்படை உரிமை குறித்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு போதும் அலட்சியம் காட்டாது. சிகிச்சையின் போது நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் அனுசரிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிய வெளிப்படையான விசாரணை நடைபெறும் என்று டாக்டர் சுல்கர்னாயின் முஹமாட் ரஃபி உறுதி அளித்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தாங்க முடியாத வலியினால் பெரும் அவதிக்கு ஆளாகி வந்ததாக கூறப்படும் சிவபெருமாள், நேற்று மரணமுற்ற நிலையில் இவ்விவகாரம் குறித்து தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் நிர்வாகத்திடம் விளக்கம் கோரப்படும் என்று வழக்கறிஞர் குணமலர் கோவிந்தராஜு தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் சிவபெருமாளின் அறுவை சிகிச்சையில் நிகழ்ந்துள்ள கவனக்குறைவிற்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனை தார்மீக பொறுப்பேற்கும் அதேவேளையில், அவரின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான சாத்தியத்தையும் குணமலர் கோவிந்தராஜு கோடிகாட்டியுள்ளார்.








