கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
காஸா மக்களுக்கான மனிதாபிமான உதவித் தொகையாகக் கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட் வழங்குவதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இரவு அறிவித்தார்.
மோசமடைந்து வரும் நெருக்கடி சூழ்நிலையில் பாலஸ்தீனியர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதில் மலேசியாவின் நிலைப்பாட்டை அவர் மறுபடியும் உறுதிச் செய்தார்.
நேற்று இரவு, கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற “மாலாம் ஹிம்புனான் டான் செலாவாட் மலேசியாகூ பெர்சமா காஸா’ என்ற பேரணியில் உரையாற்றிய நிதியமைச்சருமான அன்வார், கடந்த 2023-ஆம் ஆண்டு பாலஸ்தீனுக்கு மலேசியா 100 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக இப்போது மேலும் கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட் மலேசியா வழங்குகிறது என அன்வார் அந்தப் பேரணியில் அறிவித்தார்.
மேலும், “இந்த நாடு அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறது. இதை நீங்கள் உணர்ந்து அமைதியையும், சுதந்திரத்தையும் தற்காத்துக் கொள்ளுங்கள்” என மலேசியர்களுக்கு அன்வார் வேண்டுகோள் விடுத்தார்.








