கோலாலம்பூர், ஜனவரி.29-
சிலாங்கூர், சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜமால் முகமது யூனுஸ், ஜசெக.வின் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக்கிற்குச் செலுத்த வேண்டிய 66 ஆயிரத்து 61 ரிங்கிட் 85 சென் நிலுவைத் தொகையை அடைக்க, தனது ஒரு பக்கச் செருப்பை ஏலம் விடப் போவதாக அறிவித்துள்ளார்.
பெர்னாமா செய்திகளின்படி, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜமால் முகமது வீட்டில் உள்ள 14 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு தெரசா கோக் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜமால் யூனுஸ் தோல்வியடைந்தார். நீதிமன்றம் அவருக்கு வழங்கிய அபராதத் தொகையில் மீதமுள்ள தொகையை அவர் இன்னும் செலுத்தவில்லை.
நேற்று அம்பாங் ஜெயாவில் உள்ள அவரது வீட்டில் நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் சோபா செட் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்ட ஜமால், " தெரசா கோக் கேட்கும் பணத்தை வழங்க ஒரு பக்கச் செருப்பை ஏலம் விடுவேன்" என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
இந்த பறிமுதல் நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, ஜமால் இன்று பிற்பகல் 3 மணியளவில் அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளார்.








