சுபாங் ஜெயா, ஜூலை.30-
கடந்த திங்கட்கிழமை சுங்கை கிளாங் ஆற்றுப் பாலத்திற்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட ஓர் இளம் பெண்ணின் சடலம், தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வந்த மாணவி ஆவார் என்று அடையாளம் கூறப்பட்டது.
தனது தங்கையுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலாததால், மிகுந்த அச்சத்திற்கு ஆளான அந்தப் பெண்ணின் சகோதரி கடந்த ஜுலை 26 ஆம் தேதி போலீசில் புகார் செய்துள்ளார் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
ஜுலை 25 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் புத்ரா ஹைட்ஸ் எல்ஆர்டி ரயில் நிலையத்திற்குத் தன்னைப் பார்க்க வரும்படி 23 வயதுடைய அந்தக் கல்லூரி மாணவி, தனது அக்காளுக்கு அழைப்பு கொடுத்துள்ளார். அவர் சொன்னப்படி, மறுநாள் அவரைத் தொடர்பு கொண்ட போது, கைப்பேசி செயலிழந்து இருப்பதை அவரின் அக்காள் உணர்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி வான் அஸ்லான் குறிப்பிட்டார்.
செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில் குற்றத்தன்மைக்கானத் தடயங்களோ அல்லது பலவந்தமோ இருந்ததற்கான எந்தவோர் அறிகுறியும் இல்லை.
அந்த மாணவி தங்கியிருந்ததாக நம்பப்படும் ஜாலான் கிளாங் லாமாவில் உள்ள வீட்டையும் போலீசார் சோதனையிட்டும் குற்றத்தன்மைக்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.








