கோலாலம்பூர், செப்டம்பர்.02-
கைகலப்பு தொடர்பான விசாரணையைத் தொடராமல் இருப்பதற்குக் கைமாறாக 8 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக நம்பப்படும் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட மூவரைக் கோலாலம்பூர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
புத்ராஜெயா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அய்னா அஸாரா அரிஃபின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த உயர் போலீஸ் அதிகாரியை ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் நாளை செப்டம்பர் 3 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.
மற்ற இரு நபர்கள், மாஜிஸ்திரேட் சான் ஜியா கேய் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, செப்டம்பர் 5 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்படுவதற்கு எஸ்பிஆர்எம் அனுமதி பெற்றுள்ளது.
அந்த இரு நபர்களில் ஒருவர் பெண் ஆவார். 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு நபர்களும், போலீஸ் உயர் அதிகாரிக்கு லஞ்சம் வாங்கிக் கொடுப்பதில் இடைத் தரகர்களாகச் செயல்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.








