Feb 18, 2026
Thisaigal NewsYouTube
போலி கிளினிக்குகளுக்கு  எதிராக அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது குடிநுழைவுத்துறை
தற்போதைய செய்திகள்

போலி கிளினிக்குகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது குடிநுழைவுத்துறை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி,18-

வெளிநாட்டினரால் நடத்தப்படும் சட்டவிரோத கிளிளிக்குகள் மீண்டும் உருவாவதைத் தடுக்க, புலனாய்வுச் செயல்பாடுகள் மற்றும் அமலாக்க முயற்சிகளைத் தீவிரப்படுத்தப் போவதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் கூறுகையில், இத்தகைய நடவடிக்கைகளை நிரந்தரமாகக் கட்டுப்படுத்தத் தொடர்ச்சியான அமலாக்கம், பிற அரசு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நீண்ட கால உத்தியை குடிநுழைவுத் துறை பின்பற்றும் என்று தெரிவித்தார்.

"அதிக ஆபத்துள்ள இடங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் மற்றும் வழக்கமான ஆய்வுகளை மேற்கொள்வோம்," என்று அவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூர் அமலாக்கத் தரப்பினர், சுகாதார அமைச்சு, போலீஸ் துறை மற்றும் சுங்கத்துறை ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அமலாக்கத்தின் போது குடிநுழைவுத் துறையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட விவரங்கள் கண்டறியப்பட்டால், அவை சம்பந்தப்பட்ட பிற துறைகளுக்கு மாற்றப்படும். உதாரணமாக, அனுமதியின்றி இடங்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் பற்றிய தகவல்கள் உள்ளூர் நகராட்சி மன்றங்களுக்கு அனுப்பப்படும்.

சட்டவிரோத கிளினிக்குகளை நடத்தும் போலி மருத்துவர்களால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக மலேசிய மருத்துவச் சங்கம் எச்சரித்திருந்த நிலையில், இந்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது போன்ற சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வ இலாகாக்கள் மூலம் புகார் அளிக்குமாறு டத்தோ ஸாகாரியா கேட்டுக் கொண்டார்.

Related News