கோலாலம்பூர், நவம்பர்.09-
அன்றாட பயனீட்டாளர் தேவைகளுக்கான 316 பொருட்களின் விலைத் தகவல்களை, 'PriceCatcher' செயலி இப்போது விறுவிறுப்பாகவும், துல்லியமாகவும் வழங்குகிறது. அக்டோபர் இறுதி வரை நாடு முழுவதும் 590 ஆயிரத்திற்கும் அதிகமான பயனர்கள் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளதாக உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமட் அலி தெரிவித்தார்.
முன்னதாக, விலை கண்காணிப்பு அதிகாரிகள் மூலம் திரட்டப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு மாறாக, இந்தச் செயலி இப்போது புதிய, உலர் பொருட்கள், பால், குழந்தைகளுக்கானத் தயாரிப்புகள் உட்படப் பல வகைகளில் விலை விவரங்களைக் காட்டுகிறது. தகவல் வெளிப்படைத்தன்மையையும் டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகளையும் மேம்படுத்த, மேலும் பல பல்பொருள் அங்காடிகள் தங்கள் விலை விவரங்களைச் செயலியில் தானியங்கி முறையில் பகிர வேண்டும் என்று அமைச்சு ஊக்குவிக்கிறது.








