கோலாலம்பூர், செந்தூலில் மூன்று இலங்கைப் பிரஜைகள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் போலீசார் இதுவரையில் எட்டு அந்நிய நாட்டவர்களை கைது செய்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.
இந்த கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் பந்திங்கில் பிடிபட்ட இரண்டு ஆடவர்கள் மற்றும் ஒரு தம்பதியர் உட்பட 20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய எட்டு பேர் இதுவரையில் பிடிபட்டுள்ளனர் என்று டத்தோ அல்லவுடின் குறிப்பிட்டார்.
இந்த நால்வரைத் தவிர மூன்று இலங்கைப் பிரஜைகள் ஒரு பாகிஸ்தான் ஆடவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆகக்கடைசியாக இந்த நான்கு நபர்களும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு தரை வீட்டில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரையும் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தவிர இந்த மூன்று கொலைகள் நடந்த அன்றைய தினம் சம்பந்தப்பட்ட வீட்டில் கைது செய்யப்பட்ட கணவன், மனைவி இருவரில் கணவன் கடந்த சனிக்கிழமை ஜிஞ்சாங் போலீஸ் நிலைய தடுப்புக்காவலில் இறந்ததாக டத்தோ அல்லவுடின் குறிப்பிட்டார். 43 வயதுடய அந்த நபரின் இறப்பைத் தொடர்ந்து தற்போது ஏழு பேர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி கோலாலம்புர் செந்தூல்,ஜாலான் பெர்ஹெந்தியான், கம்போங் கோவில் ஹிலேரில் நான்கு மாடி கடை கடை வீட்டில் மூன்று இலங்கைப் பிரஜைகள் கொலை செய்யப்பட்டனர். கொலைக்கான காரணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக டத்தோ அல்லவுடின் தெரிவித்தார்.







