கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-
ஹெல்ப் (HELP) பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற “ASEZ Reduce Crime Together” எனும் கருத்தரங்கில் சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகளுடன் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கலந்து கொண்டு தமது தார்மீக ஆதரவை நல்கினார்.

ASEZ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கில் குற்றச் செயல்களை ஒன்றிணைந்து குறைப்போம் என்ற கருப்பொருளுடன் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான அணுகுமுறைகளும், பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நடைமுறைகளும் போதிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பிரகாஷ் “Reduce Crime Together” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது குற்றத் தடுப்பு முயற்சிகளில் ஒருங்கிணைந்த பங்களிப்பிற்கான அவரது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.
“குற்றத்தைக் குறைப்பது அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமல்ல அது நம்மிடமிருந்து தொடங்குகிறது,” என்று பிரகாஷ் தமது உரையில் கூறினார்.

“அண்டை வீட்டுக்காரர்கள் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்ளும் நடைமுறையுடன் சட்ட அமலாக்கத்தில் சமூகம் ஒன்றிணைந்து செயல்படும் நிலையில், இளைஞர்கள் நேர்மையானப் பாதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வழி வகுக்கிறது. இது குற்றச் செயல்களுக்கு இடமில்லாத சூழலை உருவாக்குகிறது என்று பிரகாஷ் குறிப்பிட்டார்.

குற்றத் தடுப்பு என்பது சமூகத்தின் முழு ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால் மட்டுமே குற்றச் செயல்களை முழு வீச்சில் வேரறுக்க முடியும். குறிப்பாக குற்றத் தடுப்பு மீதான விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துவது, சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து அமலாக்கத் தரப்பினரிடம் தெரியப்படுத்துதல் முதலிய அணுகுமுறைகள் இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ஆதரவுத் தளங்களை அமைப்பது உட்பட குற்றச் செயல்களைத் துடைத்தொழிப்பதில் ஒவ்வொருவரும் முக்கியப் பங்காற்ற முடியும் என்று பிரகாஷ் தமது உரையில் குறிப்பிட்டார்.

குற்றச் செயல்கள் தடுப்பு மீதான விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் ASEZ அமைப்பை பிரகாஷ் வெகுவாகப் பாராட்டினார்.








