முன்னாள் போலீஸ் அதிகாரியான 'இன்ஸ்பெக்டர் ஷீலா' என அழைக்கப்படும் ஷீலா ஷேரன் ஸ்டீவன் குமார், தமது பணிநீக்கத்தை எதிர்த்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில், முன்னாள் தேசிய போலீஸ் படை துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை, போலீஸ் துறையின் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் மற்றும் அரசாங்கம் ஆகியோர் எதிர்தரப்பினராகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தாம் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஷீலா, தம்மீது சுமத்தப்பட்ட நான்கு ஒழுங்கு நடவடிக்கைக் குற்றச்சாட்டுகள் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்றும், மேலும் 19 குற்றச்சாட்டுகளுக்கு அளித்த விளக்கங்கள் பரிசீலிக்கப்படாமலேயே பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் தற்காப்பு விளக்கம் அளிக்கவும், நேரடி விசாரணையைக் கோரவும் தமக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தம்மை மீண்டும் இன்ஸ்பெக்டர் பதவியில் அமர்த்துவதுடன், நிலுவையிலுள்ள சம்பளம் மற்றும் இதர பணப் பலன்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதற்கிடையே, வழக்கைத் தொடர்வதற்கான அனுமதியை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. எனினும், அடுத்தகட்ட விசாரணைக்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.








