கோலாலம்பூர், சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபமான கேஎல்எஸ்சிஏஎச் (KLSCAH) நில விவகாரம் தொடர்பான விசாரணைக்கு உதவ, தமது உதவியாளர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று கூட்டரசுப் பிரதேசத் துறை அலுவலகத்திற்கு வந்த மூன்று எஸ்பிஆர்எம் அதிகாரிகள், இன்று காலை தமது உதவியாளர் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த நவம்பர் 14ஆம் தேதி கோலாலம்பூர், சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தின் நிலக் குத்தகையை மேலும் 99 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. இதற்கான நிலக் கட்டணம் 46 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து வெறும் 1,000 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களைப் பாதுகாத்து, அவை எதிர்காலத் தலைமுறையினருக்கும் தொடர்ந்து சேவையாற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஹன்னா இயோ குறிப்பிட்டார்.








