கெடா, கோலா கெட்டில் பகுதியில் இந்திய ஆடவர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 12.15 மணியளவில், கோலா கெட்டில் பழைய நகர்ப்பகுதியில் உள்ள ஹொன்பெய் உணவகத்தின் முன்பாக இக்கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில், கை, கால், கழுத்தின் பின்பகுதி மற்றும் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 16 வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக கெடா மாநில போலீஸ் துறைத் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.
முன்விரோதம் அல்லது அப்பகுதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பான போட்டி இக்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
பொதுமக்கள் அளித்த தகவலின்படி, புரோட்டோன் பெர்சோனா காரில் வந்த நான்கு ஆடவர்கள், நீளமான பராங் ஆயுதங்களால் அந்த ஆடவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் போலீஸ் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 999 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.








