கோலாலம்பூர் மாநகரில் அதிகமான ஆடம்பர கொண்டோமினியம் வீடுகள், ஓன்லைன் மோசடிகளுக்கு வித்திடும் கைப்பேசி அழைப்புக்கான ஸ்கேம் மையங்களாக மாறி வருகின்றன என்று மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் அம்பலப்படுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு மாத காலமாக கோலாலம்பூர் மாநகரில் போலீசார் மேற்கொண்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் இது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்களை தேடுவதற்கு ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் தற்போது மோசடிக்காரர்களின் கூடாரமாக மாறி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக பெரும்பாலான மோசடிக் கும்பல்கள், யாரும் சந்தேகப்படாத அளவிற்கு அதிக கட்டணத்தில் இந்த ஆடம்பர அடுக்குமாடி வீடுகளை வாடகைக்கு எடுத்து, இத்தகைய ஓன்லைன் மோசடிகளை நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ அல்லாவுதீன் குறிப்பிட்டார்.
ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்பு பகுதிகளின் குடியிருப்பாளர்கள், அதிகாரிகள் ஆகியோரின் கண்களை மறைக்கும் அளவிற்கு பலத்த பாதுகாப்பு உள்ள வீடமைப்புப்பகுதிகளை தேர்வு செய்து இத்தகைய மோசடி வேலைகளை அவை கனகச்சிதமாக நடத்தி வந்துள்ளன. இத்தகைய மோசடிக் கும்பல்களின் நடவடிக்கைகளை அடுக்குமாடி வீடுகளின் ஜே.எம்.பி நிர்வாகங்கள் அணுக்கமாக கண்காணிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் மட்டும் கடந்த இரண்டு மாத காலக்கட்டத்தில் 343 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களில் பத்து பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சுாட்டப்பட்டு விட்டனர்.கோலாலம்பூர் மாநகரில் இந்த கைது நடவடிக்கைகள் எந்ததெந்த ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் நடைபெற்றன என்பதை போலீஸ் அம்பலப்படுத்துமானால் அனைவருமே அதிர்ச்சிக்குள்ளாகும் நிலை ஏற்படலாம் என்று டத்தோ அல்லாவுதீன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.








