Oct 22, 2026
Thisaigal NewsYouTube

ஹாட் யாய் செல்லும் மைசவாஸ்டீ சிறப்பு ரயிலில் சொகுசுப் பெட்டி! 50 விழுக்காடு கட்டணச் சலுகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹாட் யாய் செல்லும் மைசவாஸ்டீ சிறப்பு ரயிலில் சொகுசுப் பெட்டி! 50 விழுக்காடு கட்டணச் சலுகை

மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி, கேஎல் சென்ட்ரலில் இருந்து தாய்லாந்தின் ஹாட் யாய் நகருக்குச் செல்லும் மைசவாஸ்டீ (MySawasdee) சிறப்பு ரயிலில், நாளை அக்டோபர் 23 ஆம் தேதி முதல் எஸகுதிவ் கோச் எனும் சொகுசுப் பெட்டியை அறிமுகப்படுத்துகிறது.

14 இருக்கைகளைக் கொண்ட இந்தப் பெட்டியில், இருக்கைகளைப் படுக்கையாக மாற்றலாம். பயணத்தின்போது மூன்று முறை உணவு, இலவச வெந்நீர் பானங்கள், வைஃபை, தலையணை, போர்வை உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படும். மேலும், தனிப்பட்ட வாசிப்பு விளக்குகள், தொழுகைக்கான இடம், கழிப்பறை, பயணப் பொருள்களை வைப்பதற்கான தனி இடம் ஆகிய வசதிகளும் உள்ளன.

இந்தச் சேவையை அறிமுகப்படுத்தும் வகையில், AXC50 என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு 50 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்படி, ஒரு வழிப் பயணக் கட்டணம் வழக்கமான 750 ரிங்கிட்டிலிருந்து 375 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை மலேசியப் பிரஜைகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், அக்டோபர் முதல் டிசம்பர் 2026 வரை மேற்கொள்ளும் பயணங்களுக்குப் பொருந்தும்.

மைசவாஸ்டீ சிறப்பு ரயில் சேவை 2022 செப்டம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, 2026 செப்டம்பர் 28ஆம் தேதி வரை 32,925க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. சொகுசுப் பெட்டிக்கான பயணச்சீட்டுகளை கேடிஎம்பி மொபைல் செயலி, கிட்ஸ் ஸ்டைல், கேடிஎம்பி அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் மூலம் வாங்கலாம். விளம்பரக் கட்டணச் சலுகை குறிப்பிட்ட பயணத் தேதிகளுக்கு மட்டுமே பொருந்தும்; சலுகைச் சீட்டுகளைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்று கேடிஎம்பி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →