சிரம்பான், ஆகஸ்ட்.12-
சிரம்பான், தாமான் ஶ்ரீ பாகியில் ஆடவர் ஒருவர் தனது வீட்டின் முன் நெஞ்சுப் பகுதியில் ஆழமான கத்திக் குத்துக் காயத்துடன் இறந்து கிடந்தார்.
நேற்று திங்கட்கிழமை இரவு 7.28 மணியிளவில் குற்றுயிரும், குலையிருமாகக் கிடந்த அந்த நபர், இறந்து விட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஹட்டா சே டின் தெரிவித்தார்.
முன்னதாக, ஆடவர் ஒருவர் கத்திக் குத்துக் காயத்துடன் கிடப்பதாக மாலை 6.50 மணியளவில் பொதுமக்களிடமிருந்து போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்த நபருக்கும் 31 வயது சந்தேகப் பேர்வழிக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை கடைசியில் கத்திக் குத்தில் முடிந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.
அந்த ஆடவரைக் கொலை செய்த நபர், பொதுமக்களின் உதவியுடன் வளைத்துப் பிடிக்கப்பட்டார். அவரிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டதாக ஏசிபி முகமட் ஹட்டா தெரிவித்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. பிடிபட்ட நபரை வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








