பட்டர்வொர்த், பிப்ரவரி.15-
சீனப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, பினாங்கு மாநிலத்தில் விபத்துகள் அதிகம் நிகழக்கூடிய 12 இடங்களைக் கண்டறிந்து, வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறை சிறப்புக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய நான்கு மண்டலங்களில் 168 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, சாலை விதிமீறல்களைக் குறைத்து விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அதன் மாநில இயக்குநர் ஸுல்கிஃப்லி இஸ்மாயில் தெரிவித்தார்.
நேற்று இரவு நடைபெற்ற சோதனையின் போது 584 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, அவற்றில் 184 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், பணி நேரத்தில் ஏற்படும் இடையூறுகளுக்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டவும் இந்த ஆண்டு முதல் அதிகாரிகள் அனைவரும் உடலில் பொருத்தக்கூடிய கேமராக்களை முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ஸுல்கிஃப்லி இஸ்மாயில் மேலும் கூறினார்.








