ஜோகூர் மாநிலம் யோங் பெங் பகுதியில் உள்ள பள்ளியில் 16 வயது மாணவி ஐரின் சோஃபியா முஹமட் கைருல் ஃபைசால் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் ஆறு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில், நீதிபதி ஐய்மி நவார் முஹமட் ஒத்மான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, நாளை அக்டோபர் 10-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை சிறுவன் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்.
இதற்கு முன்பு, கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி மாலை சுமார் 5.50 மணியளவில் யோங் பெங் பள்ளியின் மண்டபத்தில் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் ஐரின் சோஃபியா கண்டெடுக்கப்பட்டார்.
பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. நான்காம் படிவத்தில் பயின்ற அவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனின் வகுப்புத் தோழி ஆவார்.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருவதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.








