குவாந்தான், டிசம்பர்.28-
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தியோமான் தீவின் கம்போங் சாலாங் பகுதியில் கடந்த டிசம்பர் 17 முதல் தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மெத்தனப் போக்கிற்கு பகாங் மாநில அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "உடனடியாகச் சீரமைப்போம் என்று கொடுத்த வாக்கை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் காற்றில் பறக்கவிட்டு விட்டன" எனச் சாடியுள்ள மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஃபாட்ஸ்லி முஹமட் கமால், இஃது அவர்களின் பொறுப்பற்றத் தன்மையையே காட்டுகிறது என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலை, வெள்ளப் பாதிப்புகளுக்கு இடையே அடிப்படைத் தகவல் தொடர்பு வசதி இல்லாமல் மக்கள் தவிப்பது அவர்களின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ளதால், எம்சிஎம்சி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். கிராமப்புற, உள்கிராம மக்களின் நலனைத் துச்சமாக மதிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.








