கோலாலம்பூர், ஜனவரி.12-
தீர்ப்புகளைக் காலதாமதமாக வழங்குவது குறித்து நீதிபதிகளுக்கு நாட்டின் தலைமை நீதிபதி டத்தோ ஶ்ரீ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே இன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீர்ப்புகளுக்கான எழுத்துப்பூர்வ காரணங்களைக் குறித்த நேரத்தில் வழங்க முடியாத நீதிபதிகள், பதவியிலிருந்து விலகுவதே கண்ணியமான வழியாகும் என்று அவர் கூறினார். "வெப்பத்தைத் தாங்க முடியாவிட்டால், சமையலறையை விட்டு வெளியேறுவதே சிறந்த விருப்பம்" என்ற பழமொழியை மேற்கோள் காட்டி அவர் பேசினார்.
தீர்ப்பு வழங்கப்பட்ட எட்டு வாரங்களுக்குள் அதன் எழுத்துப்பூர்வ காரணங்களைத் தயாரிப்பது நீதிபதிகளின் கடமை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நிலுவையில் உள்ள தீர்ப்புகளை வைத்திருக்கும் நீதிபதிகள், நீதித்துறைக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக இருப்பதாக டத்தோ ஶ்ரீ வான் அஹ்மாட் சாடினார்.
தீர்ப்புகள் எழுதப்படாமல் இருப்பதால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற '2026-ஆம் ஆண்டு சட்ட ஆண்டு தொடக்க விழாவில், டத்தோ ஶ்ரீ வான் அஹ்மாட் இந்த நினைவுறுத்தலை நீதிபதிகளுக்கு வழங்கினார்.








