Sep 26, 2026
Thisaigal NewsYouTube
விஜயின் எழுச்சி மக்கள் போராட்டத்தின் மகத்தான வெற்றி - அமைச்சர் ரமணன் கருத்து
தற்போதைய செய்திகள்

விஜயின் எழுச்சி மக்கள் போராட்டத்தின் மகத்தான வெற்றி - அமைச்சர் ரமணன் கருத்து

Share:

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான விஜய் பதவியேற்றிருப்பது, மக்களின் நீண்டகால போராட்டத்தையும், கொள்கைகளில் உறுதியாக நின்று துணிச்சலுடன் செயல்பட்டால், மக்கள் ஆதரவை வெல்ல முடியும் என்பதையும் நிரூபிப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விஜயின் அரசியல் பயணமானது, பல ஆண்டுகள் அரசியல் சவால்கள் மற்றும் அழுத்தங்களை எதிர்கொண்டு, பின்னர் மலேசியாவின் 10-வது பிரதமராக உயர்ந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் நீண்ட கால அரசியல் போராட்டத்தை நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும், மக்களின் நலனைக் காக்க நேர்மையும், தியாகமும், துணிச்சலும் அவசியம் என்பதை நிரூபித்துள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ரமணன் தெரிவித்துள்ளார்.

மேலும், பொழுதுபோக்கு துறையில் இருந்து, தமிழ்நாட்டின் உயரிய தலைமைப் பொறுப்பான முதலமைச்சர் பதவிக்கு விஜய் உயர்ந்திருப்பது, அடித்தட்டு மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ளும் தலைவரின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றும் ரமணன் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியானது, தமிழ்நாட்டில் வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் மக்கள் நலனை மேலும் வலுப்படுத்தும் புதிய அத்தியாயமாக அமையும் என்றும் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், பொருளாதாரம், கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் மலேசியா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையிலான உறவும் ஒத்துழைப்பும் மென்மேலும் வலுப்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.

Related News