கிள்ளான் ஜாலான் காப்பார் பகுதியில் உள்ள பேரங்காடி ஒன்றில் வெடிகுண்டுகள் மற்றும் சந்தேகத்துக்குரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக வந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய சோதனையில், அத்தகைய பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிள்ளான் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ரம்சே எம்போல் கூறுகையில், நேற்று மாலை 4.04 மணியளவில் மின்னஞ்சலைப் பெற்ற கடை மேலாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மோப்ப நாய்ப் பிரிவு, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கிள்ளான் உள்நாட்டு தற்காப்புத் துறை ஆகியவற்றின் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனையில், மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டதைப் போன்ற வெடிகுண்டுகளோ சந்தேகத்துக்குரிய பொருட்களோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை ரம்சே எம்போல் உறுதிப்படுத்தியுள்ளார்.








