நவம்பர் 1 முதல் கியூஆர் (QR) குறியீடு மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்குச் சேவைக் கட்டணம் விதிக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலை நிதி அமைச்சு மறுத்துள்ளது.
வரும் நவம்பர் 1 -ஆம் தேதி முதல் கியூஆர் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் என்ற தலைப்பில் பரவி வரும் சுவரொட்டி ஒன்றில் இடம்பெற்றுள்ள தகவல் உண்மையல்ல என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்குச் சேவைக் கட்டணம் விதிப்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்கள் அந்தச் சுவரொட்டியை நம்பவோ, மற்றவர்களுடன் பகிரவோ வேண்டாம் என்றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளையில் தவறான தகவல்கள், சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு நிதி அமைச்சின் அதிகாரப்பூர்வத் தகவல் தளங்கள் மூலம் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.








