நேபாள நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கும் 54 மலேசியர்களுக்கான இறப்புச் சான்றிதழ்களை விரைவாக வழங்குவதற்காக, அந்நாட்டின் சட்டங்களில் திருத்தம் செய்ய நேபாள அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
அந்நாட்டின் தற்போதைய சட்டத்தின்படி, பேரிடருக்குப் பிறகு காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் தனது அலுவலகத்திற்கு வந்த நேபாளத் தூதரகப் பிரதிநிதிகள், சட்டதிருத்தம் குறித்து தம்மிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்கான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நேபாள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அது சாத்தியமாகாவிட்டால், தொடர்பு கொள்ள முடியாத 54 மலேசியர்களுக்கும் தாமதமின்றி இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்குகள், காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட தொடர்புடைய விவகாரங்களைக் கையாள இறப்புச் சான்றிதழ்கள் அவசியம் என்றும் முஹமட் ஹசான் வலியுறுத்தியுள்ளார்.
நேபாள பேரிடரில் மாயமான 55 மலேசியர்களில் ஒருவர் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி பாதுகாப்பாக நாடு திரும்பியதையடுத்து, இன்னும் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கும் மலேசியர்களின் எண்ணிக்கை 54 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.








