- அப்பீல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்நாட்டில் இயங்கி வருகின்ற தாய்மொழிப்பள்ளிகளான தமிழ், சீனப்பள்ளிகள் தோற்றம் மற்றும் அவை போதானா மொழியாக தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்துவது, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதே என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று காலையில் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழ், சீன தாய்மொழிகளின் செயல்பாடுகள் சட்டப்பூர்வமானவே என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தாங்கள் நிலைநிறுத்துவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ சுபாங் லியான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அப்பீல் நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ என்.குனாலன் மற்றும் டத்தோ அசிசுல் அஸ்மி அட்னான் ஆகியோருடன் இணைந்து மலாய் அமைப்புகளின் மேல்முறையீட்டை செவிமடுத்த நீதிபதி டத்தோ சுபாங் லியான், அந்த மலாய் அமைப்புகளின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.
தமிழ், சீனப்பள்ளிகள் செயல்பாடு மற்றும் அவை தாய்மொழியை போதான மொழியாக கொண்டு இருப்பது கூட்டரசு அரசிலமைப்புச் சட்டம் 152 ஆவது பிரிவு மற்றும் 1996 ஆம் ஆண்டு கல்விச் சட்டம் ஆகியவற்றுக்கு முரணானது என்றும், இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கோரி, அந்த மலாய் அமைப்புகள் இந்த மேல்முறையீட்டை செய்து இருந்தன.
மலேசிய அரசாங்கம் உட்பட இதர 13 தரப்பினருக்கு எதிராக நான்கு மலாய் அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்து இருந்தன. குரு குரு முஸ்லிம் மலேசியா, மஜ்லிஸ் பெம்பங்ஙுனான் பென்டிடிக்கான் இஸ்லாம், கபோங்ஙான் பெனுலிச் மலேசியா மற்றும் இகாத்தான் முஸ்லிமின் மலேசியா ஆகியவையே அந்த நான்கு மலாய் அமைப்புகளாகும்.
இவ்வழக்கில் தமிழ், சீனப்பள்ளிகளை தற்காப்பதற்கும், வழக்கில் குறுக்கிடுவதற்கும் மலேசிய தமிழ் நெறிக்கழகம்,மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கம்,/ மலேசிய தமிழர் சங்கம், பேரா மாநில தமிழ் திருநாள் குழு,சீன கல்வி அமைப்புகளான டொங் சொங் மற்றும் ஜியா சொங் உட்பட 14 பொது அமைப்புகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது.
200 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளின் தோற்றம், செயல்பாடுகள் கூட்டரசு அரசிலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதே என்று கடந்த 2021 ஆம் ஆண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முஹமாட் நஸ்லான் முஹமாட் கசாலி அளித்த தீர்ப்பை எதிர்த்து அந்த நான்கு மலாய் அமைப்புகளும் அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தன.







