அனைத்துலக ரோட்டரி சங்கத்தின் ஒத்துழைப்புடன், டத்தோஸ்ரீ ரவி ராஜூ தலைமையிலான கிள்ளான் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்த மல்டி-சென்சரி தெரபி அறை திறப்பு விழா இன்று புக்கிட் கெமுனிங் தேசியப் பள்ளி 2 இல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்புக் குழந்தைகள் எளிதாகவும் சுமுகமாகவும் பயில்வதற்குத் தேவையான நவீன உபகரணங்களுடன் கூடிய இந்தச் சிறப்பு வகுப்பறை, ஒரு பள்ளிக்கு தலா 30 ஆயிரம் ரிங்கிட் செலவில் பிரத்யேகமாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிள்ளான் ரோட்டரி கிளப் தலைவர் டத்தோஸ்ரீ ரவி ராஜூ விவரிக்கையில், தாமான் செந்தோ தமிழ்ப்பள்ளி மற்றும் 4 தேசியப் பள்ளிகள் என மொத்தம் ஐந்து பள்ளிகளில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
சிறப்புக் குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்காக மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது. இந்த முழுத் தொகையையும் ரோட்டரி கிளப்பின் பங்காளிகள் இணைந்து நிதியுதவியாக வழங்கியுள்ளனர் என்று அவர் நன்றியுடன் தெரிவித்தார்.
இது தங்களின் அடுத்த மூன்று வருட கால திட்டமாகும் என்று குறிப்பிட்ட டத்தோஸ்ரீ ரவிராஜு, இதற்கு அப்பாற்பட்ட நிலையில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பயிற்சி அளிப்பதாகும். இதற்கு ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 3 லட்சம் ரிங்கிட் செலவாகும் என்றார்.
இந்த தெரபி வகுப்பறைகள் மூலமாகப் பள்ளிகளில் உள்ள சிறப்புக் குழந்தைகள் தங்களின் தனித்திறன்களையும், கற்றல் திறனையும் மேலும் சிறந்த முறையில் வளர்த்துக் கொள்ள முடியும் என்று கிள்ளான் ரோட்டரி கிளப்பின் துணை ஆளுநர் ரத்ன வேலு ராஜகோபால் தெரிவித்தார்.
தங்களின் இந்த முயற்சிக்கு பெரும் ஒத்துழைப்பு நல்கிய கிள்ளான் மாவட்ட கல்வி இலாகாவிற்கு கிள்ளான் ரோட்டரி கிளப் சார்பில் டத்தோஸ்ரீ ரவிராஜு நன்றி தெரிவித்துக்கொண்டார்.












