கோலாலம்பூர், ஆகஸ்ட்.03-
கோலாலம்பூர் செராஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஏழு மாதக் குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் மரணத்திற்குக் காரணம் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த தொடர் வன்முறையும், கொடுமைகளும்தான் என கோலாலம்பூர் காவல்துறையின் இடைக்காலத் தலைவர் டத்தோ முகமட் உசுஃப் ஜான் முகமட் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரேதப் பரிசோதனையில், குழந்தையின் உடல் முழுவதும் காயங்களும், மண்டை ஓட்டில் எலும்பு முறிவும் கண்டறியப்பட்டுள்ளன. குழந்தை தொடர்ந்து அழுததால் தத்தெடுத்த தாய்க்கு ஏற்பட்ட மன அழுத்தமே இந்தக் கொடூரச் சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. தாய் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிச் செய்யப்பட்டுள்ள நிலையில், தத்தெடுத்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.








