ஆண்டு இறுதியில் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட
பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்ள ஷா ஆலம்
மாநகர் மன்றம், தளவாடங்கள் மற்றும் மனித ஆற்றல் ரீதியாக முழு
தயார் நிலையில் உள்ளது.
பந்தாஸ் எனப்படும் அதிரடி நடவடிக்கை குழு, வெள்ளம் ஏற்படும்
இடங்களுக்கு விரைந்து செல்வதற்கு ஏதுவாக தற்போது 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஷா ஆலம் துணை டத்தோ பண்டார் செரெமி தர்மான் கூறினார்.
வெள்ளம் மற்றும் சட்டவிரோதமாக குப்பைக் கொட்டும்
நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக கட்டுப்பாட்டு நடவடிக்கை
மையத்துடன் தொடர்பைக் கொண்டுள்ள 145 கண்காணிப்பு
கேமராக்களையும் முக்கிய இடங்களில் மாநகர் மன்றம் நிறுவியுள்ளது
என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கேமராக்களுடன் சேர்த்து மொத்தம் 445 கேமராக்கள்
பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இவை தவிர கூடுதலாக 50 கேமராக்களை ஊராட்சி மேம்பாட்டுத் துறை அமைச்சு நிறுவியுள்ளது. தளவாடங்களைப் பொருத்த வரை மாநகர் மன்றம் கூடுதலாக இரண்டு படகுகளை தருவித்துள்ளதாக செரெமி தர்மான் தெரிவித்தார்.








