எம்ஆர்டி ரயிலில் ரோஹிங்கியா அகதி என நம்பப்படும் ஒருவர், பயணிகள் அமரும் இருக்கைகளில் படுத்து உறங்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. த்ரெட்ஸ் செயலியில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ரயிலில் கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் அந்த நபர் பொது இடக் கட்டுப்பாடுகளை மதிக்காமல், இருக்கைகளைத் தன் சொந்த இடம் போலப் பயன்படுத்தி மிகவும் வசதியாகப் படுத்து உறங்குவது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தகைய ஒழுங்கீனமான செயல்கள் நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையின் பெயரைக் கெடுப்பதோடு, வெளிநாட்டுப் பயணிகளிடையே எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும் என்றும் பலர் சாடியுள்ளனர்.
சில நெட்டிசன்கள் அகதிகளின் அவல நிலை குறித்து அனுதாபம் கொண்டாலும், பொது அமைவிடங்களில் இவ்வாறு நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது குறித்து எம்ஆர்டி நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.








