Jun 20, 2026
Thisaigal NewsYouTube
சீன - மலேசிய பாத்தேக் கலை பரிமாற்ற நிகழ்ச்சி  கோலாகலமாக நடைபெற்றது
தற்போதைய செய்திகள்

சீன - மலேசிய பாத்தேக் கலை பரிமாற்ற நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது

Share:

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் ஆதரவோடு, சீன - மலேசிய பாத்தேக் கலை பாரம்பரிய பரிமாற்ற நிகழ்ச்சி கோலாலம்பூரில் உள்ள சீன கலாச்சார மையத்தில் இன்று காலையில் சிறப்பாக நடைபெற்றது.

சீனா மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார உறவை வலுப்படுத்தும் நோக்கில், 'கைவினை இணைப்புகள்' என்ற கருப்பொருளில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலேசியாவின் பாரம்பரிய கலாச்சார மேளதாளங்கள் மற்றும் கம்பீரமான முரசொலி இசையுடன் கோலாகலமாகத் தொடங்கிய இந்நெகிழ்வில், இரு நாட்டு பாத்தேக் கைவினைக் கலைகளின் வரலாறு, பாரம்பரிய நுணுக்கங்கள் மற்றும் அதன் நவீன வடிவமைப்பு வடிவங்கள் மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக அமைந்த மாஸ்டர் டயலாக் போரம் எனும் கலந்துரையாடலில், சீனாவின் புகழ்பெற்ற மியாவ் பாத்தேக் கலைஞர் திருமதி சாய் சுன் மற்றும் கிளந்தானைச் சேர்ந்த மலேசியாவின் கைவினை கலைஞர் மாஸ்டர் இப்ராஹிம் பின் டெராமான் ஆகியோரின் பாத்தேக் கலை குறித்த ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

2026 'மலேசியாவிற்கு வருகை புரிந்திடுங்கள்' ஆண்டின் இலக்குகளை அடையும் விதமாகவும், மலேசிய பாத்தேக் கலையை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இந்நிகழ்வு அமைந்துள்ளது என்று நிகழ்விற்கு தலைமையேற்ற மலேசிய சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சின் துணை தலைமை செயலாளர் டத்தோ முகமட் யுஸ்ரீ முகமட் யுசோஃப் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சீனாவின் பாரம்பரிய நீலநிற பாத்தேக் கலை வடிவங்களும், மலேசியாவின் துடிப்பான வண்ணங்கள் மற்றும் மலர் தூவல்களுடன் கூடிய நவீன பாத்தேக் கலைகளும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

கிராஃப்டாங்கான் மலேசியாவின் துணை தலைமை இயக்குநர் அப்துல் ஹலிம் அலி, கோலாலம்பூர் சீன கலாச்சார மையத்தின் இயக்குநர் திருமதி ஹாங் நிங், அனைத்துலக கலை பரிமாற்றம், சுற்றுலா மேம்பாட்டிற்கான சீன மையத்ததின் இயக்குநர் ஜாங் ஹாவ் மற்றும் இதர பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Related News