அரசாங்கம் வழங்கும் மானிய டீசல் அளவை 6,999 லிட்டரிலிருந்து 5,000 லிட்டராகக் குறைப்பது, நாட்டின் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு பெரும் சுமையாக மாறும் என அத்துறைச் சார்ந்த டேனியல் கூ தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு நீண்ட தூரம் செல்லும் லாரி நிறுவனங்களுக்கு, தற்போதைய டீசல் அளவே போதவில்லை. இந்தச் சூழ்நிலையில், டீசல் அளவை மேலும் குறைப்பது அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளை பெரிதும் பாதிக்கும்.
குறிப்பாக, நீண்ட தூரம் செல்லும் லாரிகளுக்கு இந்த 5,000 லிட்டர் டீசல் 10 நாட்களிலேயே தீர்ந்துவிடும் என்பதால், நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு டீசல் வாங்க நேரிட்டு செலவுகள் அதிகரிக்கும். இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியால் லாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டால், தொழிலாளர்கள் வருமானத்தை இழக்கும் சூழல் உருவாகும் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
கட்டுமானம், உற்பத்தி உள்ளிட்ட நாட்டின் முக்கியப் பொருளாதாரத் துறைகளுக்குப் போக்குவரத்துத் துறையே முதுகெலும்பாக விளங்குகிறது. இந்தச் செலவீன உயர்வு இறுதியில் பொதுமக்களையே பாதிக்கும் என எச்சரித்துள்ள டேனியல் கூ, அரசாங்கம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து பழைய அளவிற்கே மானிய டீசலை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், மானியக் கசிவைத் தடுக்க எல்லைகளிலும் எரிபொருள் நிலையங்களிலும் சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமே தவிர, முறையான போக்குவரத்துத் துறையினரைப் பாதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








