டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவான ஏஐ மிக வேகமாக வளர்ந்து வரும் தற்காலச் சூழலில், ஊடகவியலாளர்கள் தங்களின் நேர்மையையும் செய்திகளின் துல்லியத்தன்மையையும் காப்பது மிக முக்கியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இன்று பினாங்கு, பட்டவொர்த் பிஐசிசிஏ மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய ஊடகவியலாளர் தினமான ஹவானா 2026 மாநாட்டின் நிறைவு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ அன்வார், துர்க்மெனிஸ்தான் நாட்டிற்கான தனது அதிகாரப்பூர்வப் பயணத்தை முடித்துக் கொண்டு, அவர் நேரடியாக பினாங்கு வந்தடைந்து இந்நிகழ்வில் பங்கேற்றார்.
"ஊடக நேர்மை, நம்பகத்தன்மையின் அடித்தளம்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டில், எல்லையற்ற தகவல் பரவல்களுக்கு மத்தியில் உண்மையான செய்திகளைச் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.
அதேவேளையில் ஹவானாவிற்கு 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மானியமாக ஒரு மில்லியன் ரிங்கிட்டை டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்தார்.
தவறான செய்திகளும், உள்நோக்கம் கொண்ட அவதூறுகளும் பெருகிவரும் வேளையில், ஊடகங்கள் தங்களின் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் பல்லினச் சமூக அமைப்பைப் பாதுகாப்பதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு எனக் குறிப்பிட்ட பிரதமர், செய்திகளை வெளியிடும்போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும், நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் பொறுப்புக்கூறலுடன் செயல்படுவதும் அவசியம் என்றார்.
அரசாங்கம் எப்போதும் ஊடகச் சுதந்திரத்தை மதிக்கும் அதே வேளையில், அந்த சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் யாவ், தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில், துணை அமைச்சர் தியோ நி சிங் மற்றும் ஊடகத்துறை ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் ஹவானா நிகழ்வில் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.








