Jul 14, 2026
Thisaigal NewsYouTube
கோலா மூடா மாவட்டத்தில் 8 இடங்களில் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை – 22 சட்டவிரோத வெளிநாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

கோலா மூடா மாவட்டத்தில் 8 இடங்களில் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை – 22 சட்டவிரோத வெளிநாட்டினர் கைது

Share:

மலேசிய குடிநுழைவுத் துறை கெடா மாநிலம் கோலா மூடா மாவட்டத்தைச் சுற்றியுள்ள 8 இடங்களில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டு அதில் 22 சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகளை கைது செய்திருப்பத்தாக கெடா மாநில குடிநுழைத்துறையின் தலைமை இயக்குனர் முகமாட் ரிட்சுவான் பின் முகமாட் ஜென் தெரிவித்தார்.

காலை 10.00 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கை ஆப்ஸ் பெர்சேபாது, ஆப்ஸ் கெகார், ஆப்ஸ் சாப்பு மற்றும் ஆப்ஸ் செலரா ஆகிய நடவடிக்கைகளின் கீழ், கிடைத்த உளவுத் தகவல்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில் கெடா மாநில குடிநுழைவுத் துறையின் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 12 அதிகாரிகள், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்திலிருந்து 4 அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டனர்.

சோதனையின் போது 8 வளாகங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், 76 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 52 மலேசியர்கள் மற்றும் 24 வெளிநாட்டினர் அடங்குவர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 22 வெளிநாட்டினர் குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963-இன் கீழ் பல்வேறு குற்றங்களைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 15 மியான்மர், 4 இந்தோனேசியா, 2 வங்காளதேசத்தினர் மற்றும் 1 தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். இவர்களிடமிருந்து

செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் இருப்பது, அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி மலேசியாவில் தங்கியிருப்பது மற்றும் குடிநுழைவுத் துறை வழங்கிய அனுமதிப் பத்திர நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட குற்றங்கள் கண்டறியப்பட்டன.

மேலும், விசாரணைக்கு உதவும் வகையில் 7 Imm.29 சாட்சி அழைப்பாணை படிவங்களும் வழங்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஆவணப் பதிவு மற்றும் மேலதிக விசாரணைக்காக பெலாந்திக் குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர், நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முகமாட் ரிட்சுவான் பின் முகமாட் ஜென் குறிப்பிட்டார்.

Related News