கோலாலம்பூர், ஆகஸ்ட்.15-
டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பதற்கு முன்னாள் மாமன்னர் பிறப்பித்த கூடுதல் அரசாணை உத்தரவு செல்லத்தக்கது என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் முடிவு செய்யுமானால் அந்த முன்னாள் பிரதமர், வரும் நவம்பர் மாதம், சிறைச் சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என்று சட்ட நிபுணர் ஹானிஃப் கட்ரி அப்துல்லா கோடி காட்டியுள்ளார்.
முன்னாள் மாமன்னர் பிறப்பித்த அரசாணை உத்தரவைச் செயல்படுத்தக் கோரி, சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு டத்தோ ஶ்ரீ நஜீப்பிற்கு கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி புதன்கிழமை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
லஞ்ச ஊழல் வழக்கில் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நஜீப்பை வீட்டுக் காவலில் வைக்கக் கோரும் அரசாணை உத்தரவு ஆவணமொன்றை முன்னாள் மாமன்னர் வெளியிட்டிருக்கிறார் என்பதைச் சட்டத்துறை தலைவரின் அலுவலகம் முந்தைய விசாரணைகளில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் தமக்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணை உத்தரவை அமல்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் நஜீப் தொடுத்த சட்ட நடவடிக்கை வழக்கைத் தொடர்வதற்கு கூட்டரசு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு அனுமதி அளித்து இருப்பது மூலம் நஜீப்பிற்கு வீட்டுக் காவல் அனுமதி கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று முன்னணி வழக்கறிஞரான ஹானிஃப் கட்ரி அப்துல்லா குறிப்பிட்டார்.
அந்த அரசாணை உத்தரவு செல்லத்தக்கதே என்று உயர் நீதமன்றம் தீர்ப்பளிக்குமானால் வரும் நவம்பர் மாதம் நஜீப்பிற்கு சிறைச்சாலைத் தண்டனை, வீட்டுக் காவலாக மாறலாம் என்று நடப்பு சட்டங்களை விளக்கி ஹானிஃப் கட்ரி அப்துல்லா கோடி காட்டியுள்ளார்.








