கோலாலம்பூர், ஆகஸ்ட்.26-
கடந்த ஆண்டில் நாட்டில் 31 ஆயிரத்து 949 மோசடிச் சம்பவங்கள் நிழ்ந்துள்ளன என்று புகார் செய்யப்பட்டுள்ளது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் தரவுகள் காட்டுவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இதன் வாயிலாக 1.5 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் 11 ஆயிரத்து 864 தனிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகக் குற்றப் பிரிவு நடத்திய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகளின் வாயிலாக பெரிய எண்ணிக்கையில் தனிநபர்கள் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இது சுலபமான பணி அல்ல. கடினமான மிகப் பெரிய பொறுப்பு. இருப்பினும் போலீஸ் படை அதிக சிரத்துடன் இப்பணிகளை நிறைவேற்றியுள்ளது என்று கோலாலம்பூரில் இன்று போலீஸ் படையுடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சைஃபுடின் மேற்கண்டவாறு கூறினார்.








