புத்ராஜெயா, அக்டோபர்.18-
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தற்போது அனுமதிக்கப்பட்ட வயது வரம்பை 13 லிருந்து 16 ஆக உயத்துவது குறித்து அரசாங்கம் ஆராயவிருக்கிறது என்று சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த உத்தேசத் திட்டம் அமல்படுத்துவதற்கு முன்னதாக அது குறித்து விரிவாக ஆராயப்படும் அதே வேளையில் சமூக ஊடகத் தளங்களை நிர்வகிக்கின்றவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று அவர் விளக்கினார்.
தற்போது சமூக ஊடகங்கள் குறிப்பாக ஓன்லைனைக் கண்காணிக்கவும், பாதுகாக்கப்படுவதற்கும் உரிய சட்டங்கள் உள்ளன. அதே போன்று சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவற்கு எந்த வயதிலிருந்து அனுமதிப்பது என்பது தொடர்பில் பல நாடுகள் மாறுபட்ட வயது வரம்பு நிர்ணயத்தைக் கொண்டுள்ளன என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில் மலேசியாவில் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அந்த வயது வரம்பை 16 ஆக உயர்த்துவற்கு அரசாங்கம் உத்தேசிக்கும் போது அது தொடர்பான சட்டங்களையும் இயற்ற வேண்டியுள்ளது என்று அஸாலினா குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களின் வயது வரம்பு 16 ஆக உயர்த்துவது தொடர்பில் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் நேற்று பரிந்துரை செய்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் அஸாலினா மேற்கண்டவாறு கூறினார்.