ஷா ஆலாம், அக்டோபர்.03-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகாமுனி மலையாளத்தின் வீடு புதிதாகப் புதுபிக்கப்பட்டு வீட்டின் சாவியும் இன்று ஒப்படைக்கப்பட்டது. கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் சிலாங்கூர் மாநில மேம்பாட்டு இயக்குநர் டத்தோ முகமட் கிண்டிர் மாஜிட் மற்றும் ஷா ஆலாம் மாநகர் மன்றம், மண்டலம் 14 கவுன்சிலர் யோகேஸ்வரி சாமிநாதன் ஆகியோர் இணைந்து பெரியவர் மகாமுனியிடம் சாவியை ஒப்படைத்தனர்.
புக்கிட் கெமுனிங் பத்து 8 இல் மகாமுனி வசித்து வருகிறார். அவரின் வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அவ்வீட்டில் யாரும் தங்க முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக இருந்தது.

இதன் அடிப்படையில் அவரின் பிரச்சினை, யோகேஸ்வரி சாமிநாதன் மூலம், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு பின்னர் மத்திய அரசாங்கத்தின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவான ஐசியுவின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
இதன் பலனாக மகாமுனியின் வீட்டைப் புதுபிக்க ஐசியுவில் இருந்து 80,000 ரிங்கிட் கிடைத்தது. கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி சார்பில் 15,000 ரிங்கிட் வழங்கப்பட்டது. இன்னும் பலரின் ஆதரவுடன் மகாமுனியின் வீடு புதுபிக்கப்பட்டு வீட்டிற்கான சாவியும் இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரகாஷ், வீட்டை ஆடம்பரமாகக் கருதக்கூடாது. மாறாக, அது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமையாகப் பார்க்க வேண்டும். மேலும் வீட்டுவசதி என்பது அனைத்து குடிமக்களுக்கும் ஓர் உரிமையாக இருக்க வேண்டும் என்று பிரகாஷ் வலியுறுத்தினார்.
ஷா ஆலாம் மாநகர் மன்றத்தின் மண்டலம் 14 கவுன்சிலர் யோகேஸ்வரி சாமிநாதன் கூறுகையில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நான்கு மாதங்களில் இந்த வீடு புதுப்பித்துக் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி அரசாங்கத்தின் மூலம் தனது வீடு புதுப்பிக்கப்பட்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பெரியவர் மகாமுனி குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கவுன்சிலர் யோகேஸ்வரியின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளைச் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் வெகுவாகப் பாராட்டினார். யோகேஸ்வரி ஓர் உண்மையான தலைவரின் எடுத்துக்காட்டு. மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் அவர் காட்டும் உழைப்பு, அர்ப்பணிப்பு அனைவருக்கும் முன்னுதாரணம். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அவரது பங்களிப்பு அளப்பரியது என்று பிரகாஷ் பாராட்டினார்.








