முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜாமில் கீர் பஹரோம் மீது, கடந்த 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை தபுங் ஹாஜி நிறுவனத்தின் 860.3 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை விற்பனை செய்ய காரணமாக இருந்ததாகக் கூறி மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
65 வயதான ஜாமில் கீர், இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்.
நீதிபதி ரோஸ்லி அஹ்மாட் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
தபுங் ஹாஜியின் 860 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் அல்-ரௌவ்டா ரியல் எஸ்டேட் டெவெலப்மெண்ட் அண்ட் புரோஜெக்ஸ் மெனஜ்மெண்ட் கோ லிமிடட் Al-Rawda Real நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முதல் குற்றச்சாட்டில் 42.94 மில்லியன் ரிங்கிட்டும், இரண்டாவது குற்றச்சாட்டில் 288.17 மில்லியன் ரிங்கிட்டும், மூன்றாவது குற்றச்சாட்டில் 529.19 மில்லியன் ரிங்கிட்டும் அடங்கும்.
இந்த சம்பவங்கள், 2015 -ஆம் ஆண்டு ஏப்ரல் 3, 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் 14 மற்றும் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆகிய தேதிகளில் புத்ராஜெயாவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
மூன்று குற்றச்சாட்டுகளும் குற்றவியல் சட்டம் பிரிவு 403-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பிரம்படி மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம்.
முன்னாள் ஜெராய் நாடாளுமன்ற உறுப்பினரான ஜாமில் கீர், நீதிமன்றத்தில் கருப்பு நிற உடையில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.








