மலாக்கா மாநிலத்தின் டுரியான் துங்கால் அணையில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலச் செயலாளர் சல்ஹா சாலே கூறுகையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நீர்த் தரக் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளில், சுத்திகரிக்கப்பட்ட நீர் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து கண்காணிப்பு, ஆய்வு, நீர் மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அணைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை, நீர் மாசுபாடு அல்லது குடிநீர் விநியோகத்துக்கு அச்சுறுத்தல் எனக் கருதக்கூடாது என்றும் சல்ஹா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், நீரின் பாதுகாப்பு, உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் சம்பவத்திற்கான காரணம் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








