Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாணவனுக்கு 7 நாள் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

மாணவனுக்கு 7 நாள் தடுப்புக் காவல்

Share:

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.15-

பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் நான்காம் படிவ மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டாம் படிவ மாணவனை 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.

விசாரணைக்கு ஏதுவாக 14 வயது மாணவன், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவனை வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.

அந்த மாணவன் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக இன்று ஷா ஆலாமில், சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஷாஸெலி காஹார் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த கொலை தொடர்பில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், பள்ளி நல்லுரையாளர் உட்பட இதுவரை 57 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கொலைச் சம்பவத்தில் மூன்றாம் தரப்பு யாரும் சம்பந்தப்படவில்லை என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். தவிர கொலையுண்ட மாணவிக்கும், சந்தேக நபருக்கும் இதற்கு முன்பு எந்தவொரு தொடர்புமில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.

Related News