சிப்பாங், ஆகஸ்ட்.21-
பகடிவதையினால் மரணம் அடைந்ததாகக் கூறப்படும் முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் இறப்பு தொடர்பில் பொது அமைதிக்கு குந்தகத்தை விளைவிக்கும் தன்மையிலான பொய்யானத் தகவல்களைப் பதிவேற்றம் செய்ததாக ஆங்கிலமொழி ஆசிரியர் ஒருவர், சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
39 வயது சித்தி ஹாஜார் அஃப்லா ஷாருடின் என்ற அந்தப் பெண் ஆசிரியர், மாஜிஸ்திரேட் கைராதுல் அனிமா ஜெலானி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. பொது அமைதிக்குக் குந்தகத்தை ஏற்படுத்தக்கூடிய குற்றங்களை மக்கள் புரிவதற்கு தூண்டும் வகையில் அந்த ஆசிரியரின் உள்ளடக்கக் கருத்து பதிவேற்றம் அமைந்திருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முதலாவது முனையத்தில் ஷா_அப்ரியேண்டா என்ற டிக் டோக் கணக்கில் சித்தி ஹாஜார், அந்த உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 505 பிரிவின் கீழ் சித்தி ஹாஜார் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








