கோலாலம்பூர், செப்டம்பர்.29-
போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் துணை பப்ளிக் பிராசிகியூட்டருக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் அவர், சட்டத்துறை அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். விசாரணை முடியும் வரையில் டிபிபி என்ற முறையில் அந்த அதிகாரி, வழக்கமான பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார் என்று சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் தெரிவித்தார்.
விசாரணை முழுமை பெற்றப் பின்னரே அந்த டிபிபி அதிகாரிக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் விளக்கினார்.
எஸ்பிஆர்எம்மில் பணிக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த அதிகாரி போதைப்பொருளுடன் பிடிபட்டதாக கூறப்படும் தகவலை அந்த ஆணையம் உறுதிப்படுத்தியது.
அந்த அதிகாரியின் வீட்டைச் சோதனையிட்ட போலீசார், போதைப்பொருளைக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.








