புத்ராஜெயா, டிசம்பர்.18-
காஸாவிற்கு மலேசியா வழங்கி வரும் மனிதாபிமான உதவிகளைக் கேள்விக்குள்ளாக்கும் சில தரப்பினரைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகக் சாடியுள்ளார்.
அவ்வாறு விமர்சனம் செய்வோர் அடிப்படை மனித உணர்வுகள் கூட இல்லாதவர்கள் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக காஸாவிற்கு 100 மில்லியன் ரிங்கிட் மனிதாபிமான உதவிகளை மலேசியா அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அன்வார், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சியில் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதாகவும் அன்வார் விளக்கமளித்துள்ளார்.
இந்த போரினால் அப்பாவி குழந்தைகளும், பெண்களும் கொல்லப்படுவதோடு, பெரும்பாலான மசூதிகளும், தேவாலயங்களும் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.








