Nov 12, 2025
Thisaigal NewsYouTube
பரஸ்பர பணியிட மாற்ற முறையை அறிமுகப்படுத்துவீர்
தற்போதைய செய்திகள்

பரஸ்பர பணியிட மாற்ற முறையை அறிமுகப்படுத்துவீர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தியிருப்பதைப் போன்று ஆசிரியர்கள் மத்தியில் இருவருக்கு இடையில் பரஸ்பர முறையில் பணியிடம் மாற்றம் செய்து கொள்ளும் திட்டத்தை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்த வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் குளுவாங் எம்.பி. வோங் ஷூ கி கேட்டுக் கொண்டுள்ளார்.

இரு ஆசிரியர்கள் மத்தியில் ஒருமித்த கருத்துடன் பணியிடம் மாறிக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துவது மூலம் பள்ளிகளில் நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்க முடியும் என்று வோங் ஷூ கி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனக்குப் பொருந்தி வராத ஓர் இடத்தில் ஆசிரியர் ஒருவர் வேலை செய்ய முடியாத நிலையில், அவர் பணியிலிருந்து விலகும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, அந்த ஆசிரியர் கோருகின்ற ஏற்புடைய இடத்திற்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாறிச் செல்வதற்கும், அவருடைய இடத்தை அங்கிருந்து வரக்கூடிய மற்றொரு ஆசிரியர் நிரப்புவதற்கும் இரு ஆசிரியர்களுக்கு இடையில் பரஸ்பர பணியிட மாற்றம் செய்து கொள்வதற்கான அணுகுமுறை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அந்த எம்.பி. வலியுறுத்தினார்.

இதன் மூலம் கணவர் ஓர் இடத்திலும், மனைவி மற்றொரு இடத்திலும் வேலை செய்யும் நிலையில்லாமல் சுகாதார அமைச்சைப் போன்று கணவரும், மனைவியும் ஒரே பகுதியில் வேலை செய்யும் சூழல் ஏற்படும் என்று வோங் ஷூ கி தெரிவித்தார்.

அடுத்த புதிய கல்வியாண்டில் 5 லட்சத்து 9 ஆயிரத்து 451 கல்விப் பணியாளர்கள் தேவைப்படும் பட்சத்தில் அதனை நிறைவுச் செய்வதற்கு “ சுகா சமா சுகா “ முறையை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related News