2025 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 10A அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், மெட்ரிகுலேஷன் படிப்பில் தானியங்கி முறையில் இடம் வழங்கும் வாக்குறுதியை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும் என ஜசெக. வலியுறுத்தியுள்ளது.
ஜசெக. மத்திய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு இன்று அறிக்கை வெளியிட்ட அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக், தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மற்ற திறமையான மாணவர்களுக்கும் இடவசதிக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தற்போதுள்ள 90 விழுக்காடு பூமிபுத்ரா மற்றும் 10 விழுக்காடு பூமிபுத்ரா அல்லாதோர் எனும் ஒதுக்கீட்டு முறைக்கு பாதிப்பு ஏற்படாமல், 10A பெற்ற அனைவருக்கும் இடம் தருவதாக அரசாங்கம் உறுதியளித்து இருப்பதை போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.
2025-ஆம் ஆண்டு முதல் 'A-' மதிப்பெண் பெற்றவர்களையும் இதில் சேர்க்கும் வகையில் கொள்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளதை ஜசெக. வரவேற்பதாகவும் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








