கோத்தா கினபாலு, செப்டம்பர்.17-
கடந்த ஜூலை 15-ம் தேதி, இரவு பள்ளியின் தங்கும் விடுதி அறையில் இருந்து வெளியேறிய மாணவி ஸாரா கைரினா மகாதீர், தான் திருடவில்லை, முட்டாள் என அழுது கூச்சலிட்டதாக எஸ்எம்கேஏ துன் டத்து முஸ்தபா பள்ளியின் தலைமை வார்டன் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
31 வயதான தலைமை வார்டன் அஸாரி அப்துல் சகாப் மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று அளித்த சாட்சியத்தில், படிவம் ஒன்று மாணவி ஒருவர் தனது பொருட்கள் சிலவற்றைக் காணவில்லை என விடுதித் தலைவரிடம் புகார் அளித்ததாகவும், அதற்காக ஸாரா விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், பொருட்களைத் திருடினாயா என ஸாராவிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், பின்னர் சத்தியப் பிரமாணம் செய்ய சொல்லப்பட்டதாகவும் அஸாரி அப்துல் சகாப் குறிப்பிட்டுள்ளார்.








